
கி.அ.தில்லைதாசன்
வழியெங்கும்......
விழிகண்ட சோகங்கள்
நின்று.... கரம் நீட்ட முடியாமல்
என் ஓட்டங்கள் நிகழ்ந்தது
வலிகள்.......
ஏற்ற சுமைகள் எண்ணிலடங்கா.
காற்றுப் போய்.....
காலம் போய்....
தோற்றுப்போன மனதோடு நான்
இடர்பட்டு......
நடை கண்ட பொழுதுகள்
குருதியில் துளிர்த்த
குப்பை மேட்டுச் செடிகள்
வழியெங்கும்......
வாழ்வைத் தொலைத்தோர் ஓலங்கள்
சாவுதான் முடிவெனக் கொண்டு
எல்லை வரை ஓடினேன்
மீண்டு வந்தேன்
வலியிலிருந்து
மீண்டுவர முடியவில்லை
எந்தன் மனதினில்......
கையறுந்து..... காலறுந்து.....
மெய் கிழிந்து போனோர்...
நினைவுகளுண்டு
அவர் எண்ணங்கள்...
காற்றாய் வீசுகையில்
அந்த நினைவுகள்....
சருகுகளாய்
என்னுள்
சலசலத்த படியே இருக்கும்.