வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மனது வலிக்கிறது




















கி.அ.தில்லைதாசன்

செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது வலிக்கிறது

எம் பாட்டன் பாட்டி
பாவம் செய்தாரோ?
தாய்மண்..........?
ஏன் வலிக்கிறது

சாபக்கேடு யார் தந்தது
சாவுகள் நாங்கள் கேட்கவில்லை
ஏன் துரத்தித் துரத்தி அடித்தார்
சுட்ட காயம் ஆறவில்லை
பஞ்சு நெஞ்சம் எரிகிறது

மண்மீது குருதிகள் தெளித்து......
ஓடினோம்
குப்பை மேட்டுச் செடிகள்......
குருதியில் துளிர்த்தன.
குருதி குழைத்த மண்...
மணக்கிறது

நாங்கள் மந்தைக் கூட்டங்களா
எம்மைத் துரத்தியதும்
துரத்திப் பிடித்து அடைத்ததும்
அவ்வாறுதான்

ஏன் சர்வதேசம் சாவு தேசத்தை.....
நினைவிற் கொள்ளவில்லை
கொல்லப்பட்ட பின்பு
விசாரணைகள் எதற்கு
வந்து பாருங்கள்....
எங்கள் வாசல்கள் இல்லை
குந்தியிருந்த நிலமும்
பறிபோகிறது

செய்த பாவந்தான் என்ன
யாரை அழித்தோம்
யாரை எரித்தோம்
யார்க்கும் தீங்கிழைத்ததில்லை
மனது..............
வலிக்கிறது.

புதன், 11 ஆகஸ்ட், 2010

உன்னை வளர்த்தலும் என்னை அழித்தலும்



















கி.அ.தில்லைதாசன்

நீ கெட்டவள்
என் நெஞ்சை எரித்துப் போனாய்
நான் தொட்டவன்
துரத்தித் துரத்திச் சுட்டாய்

நெஞ்சில் வஞ்சம் சுமந்து
நீ நிமிர்ந்தாய்
புன்னகைத்து
எனை வளைத்தாய்
உன் சுவாசத்துக்காய்
என்னைத் திறந்தாய்
நீ நடக்க
என்னை செருப்பாக்கினாய்
நீ சிறக்க
என்னில் வலை மாட்டினாய்
மாட்டிப்போன பிறகு
நான் நான்தான்
நீ நீதான் என்றாய்
இரந்து கேட்ட போது
இரக்கமற்ற குணத்தில்
உறுதியானாய்

உன்னிடம் நான்......
மாற்றங்கள்தான் கேட்டேன்
ஏமாற்றம் தந்தாய்.
வளைத்ததும் சிரித்ததும்
வலை போட்டதும்
என்னைத் திறந்ததும்
உனக்கு மறந்து போச்சு

நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்
நான்......
வலியேறிக் கிடக்கிறேன்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

நான் நீ

















கி.அ.தில்லைதாசன்

நான் நானாக இருந்தேன்
நீ நீயாக இருந்தாய்
நானான என்னை
ஏன் நீ நீயாக்கினாய்
நானின்று நானாக இல்லை
நீயாகிப் போனேன்
நீயன்று நீயாக இல்லை
நானாகி நின்றாய்
நீ நானென்றும்
நான் நீயென்றும்
ஊர் அறியும்

இன்று....
நானான என்னை
நீயாக மாற்றி
நீமாறிப் போதல்....
நியாயமில்லை
நீயினி நீயாக இருக்கலாம்
நான் நானாக
இருக்கப் போவதில்லை
நீயாகத்தான் இருப்பேன்

வியாழன், 29 ஜூலை, 2010

அபகரிப்பும் ஆக்கிரமிப்பும்
















கி.அ.தில்லைதாசன்

அந்த மிருகங்களின்....
கோர முக
வேட்டைகள் தொடர்கின்றன.
மான்கள் மாண்டு போகும் நிகழ்வு
இடம்பெறுகின்றது
காலம் மாறி... கோலம் மாற....
வாழ்வும் மாறிப் போச்சு

இயல்புகளெல்லாம் மாறி்...
ஆக்கிரமிப்புகள் எழுகின்றன.
மாண்டு போனது தெரியும்
மீண்டுவர வழி?

துணிவோடு.......
அபகரிப்பும் தொடரும்
நாளை மலரும் துளிர்கள் கருகும்
காலை சூரியன் கடுமையாய் சுடும்
கத்தும் கடல் கவலை சுமக்கும்
காற்றும் அனல் கொள்ளும்

இனி........
மான்கள் தினமும்
வேட்டையாடப் படலாம்
துன்புறுத்தப் படலாம்
ஏது நிகழுமென்ற....
பய.....நினைவுகளோடு...
வாழ்வு தொடர்கிறது..........................!

புதன், 28 ஜூலை, 2010

சருகுகளாய் நினைவுகள்

















கி.அ.தில்லைதாசன்

வழியெங்கும்......
விழிகண்ட சோகங்கள்
நின்று.... கரம் நீட்ட முடியாமல்
என் ஓட்டங்கள் நிகழ்ந்தது
வலிகள்.......
ஏற்ற சுமைகள் எண்ணிலடங்கா.
காற்றுப் போய்.....
காலம் போய்....
தோற்றுப்போன மனதோடு நான்

இடர்பட்டு......
நடை கண்ட பொழுதுகள்
குருதியில் துளிர்த்த
குப்பை மேட்டுச் செடிகள்
வழியெங்கும்......
வாழ்வைத் தொலைத்தோர் ஓலங்கள்

சாவுதான் முடிவெனக் கொண்டு
எல்லை வரை ஓடினேன்
மீண்டு வந்தேன்
வலியிலிருந்து
மீண்டுவர முடியவில்லை

எந்தன் மனதினில்......
கையறுந்து..... காலறுந்து.....
மெய் கிழிந்து போனோர்...
நினைவுகளுண்டு
அவர் எண்ணங்கள்...
காற்றாய் வீசுகையில்
அந்த நினைவுகள்....
சருகுகளாய்
என்னுள்
சலசலத்த படியே இருக்கும்.

காகங்கள் கரைதல்






கி.அ.தில்லைதாசன்


அந்தக் காகங்கள்....
இன்றும் கரைந்தன.
பாட்டியின்....
எட்டிப் பார்த்தல் நிகழ்வு தொடர்கிறது

யார் வருகிறார்கள்....
அவளுக்குள்....
எதிர்பார்ப்புக்கள்.
இன்றல்ல......
நீண்ட நாளாய் இவள்...
எட்டித்தான் பார்க்கிறாள்

வசதியில்லையெனினும்.....
வசந்தங்கள் கண்டவள்...
வலியேறிக் கிடக்கின்றாள்
ஒளி தேடி ஒடிந்து போனாள்
நடை தளர்ந்தாள்

தனித்துத் தவித்தல் நிலை வந்தது
ஒளியூட்ட வந்த பேரன்
எங்கு? தெரியாதாம்.
நீண்ட தேசப் பயணத்தில்
மாண்டு போய்......
இல்லை இல்லை இருக்காது.
விடை இன்னும் இல்லை.
என்ன விதியோ!

காகங்கள் நாளையும் கரையும்
எட்டிப் பார்த்தல் நிகழ்வு
பேரன் கிடைக்கும் வரை....
தொடரும்.
அவளின்.....
தாகங்கள் தீருமா?

வியாழன், 22 ஜூலை, 2010

நட்டுவம்




















கி.அ.தில்லைதாசன்

இரண்டு பக்கமும்
இடியிறக்க...
நட்டுவம் அழுகை கொள்கிறது
அது நாதமாய்
பலருக்குத் தெரிகிறது

நட்டுவம்
ஒளிகளைத் தொலைத்து
வசந்தங்கள் தேடுது
யாரும் அடிக்காத வரையில்
இதற்கு அமைதிகள்
சொந்தமாய்

இடையிடையில்...
இரண்டு பக்கங்களிலும்
அதிர்வுகள் வருகின்ற
பட்சத்தில்.....
வலியெடுக்கும் நிகழ்வே
இங்கு நடக்கும்

அதனை காவி வைத்தும்
அடிப்பார்
மடியில் சாயவைத்தும்
அடிப்பார்
சாயவைத் தடித்தல்
மடி கொடுத்து
வலி கொடுத்தல் ஆகும்
இதுவே இங்கு தொடர்கிறது

வலி தெரியாதவர்களின்
பிடியில் மாண்டு...
நட்டுவம்.......
அழுகை கொள்கிறது
உள்ளக வலிகளோடு.

மனது வலிக்கிறது

கி.அ.தில்லைதாசன் செய்த பாவந்தான் என்ன யாரை அழித்தோம் யாரை எரித்தோம் யார்க்கும் தீங்கிழைத்ததில்லை மனது வலிக்கிறது எம் பாட்டன் பாட்டி பாவம் செ...